கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் வெடி பொருட்கள் பறிமுதல்


கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் வெடி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் சோதனை நடத்தியதில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்


கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் சோதனை நடத்தியதில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.

டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகை

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரில் சம்பவ இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு சென்றார். அங்கு வெடித்து சிதறிய கார், சேதமான கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பகுதி, மேலும் விபத்து நடந்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

வெடி பொருட்கள் பறிமுதல்

இதன்பின்னர் டி.ஜி.பி. சைலலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்ததில் இறந்தவர் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது. அவரது பெயர் ஜமேஷா முபின், என்ஜினீயர். அவர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர். இந்த கோவில் அருகே போலீஸ் ேசாதனை சாவடி உள்ளது. காரில் ஜமேஷா முபின் வந்த போது போலீசாரை கண்டதும், காரை விட்டு இறங்கி செல்ல முயன்று உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் குளோரைடு, அலூமினியம் நைட்ரேட், சல்பர், உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இறந்த நபர் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை.

பின்னணி குறித்து விசாரணை

மேலும் அவரது செல்போனை கைப்பற்றி அவருடன் தொடர்பில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் துப்பு துலக்கப்பட்டு உள்ளது. ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் 9 பேரிடம் கைமாறி 10-வது நபரிடம் வந்து உள்ளது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கியாஸ் சிலிண்டர்களை அவருக்கு சப்பளை செய்தது யார் என்பது குறித்தும் தெரியவந்து உள்ளது. கார் வெடித்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள், கோலி குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

ஏற்கனவே ஜமேஷா முபின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி உள்ளனர். மேலும் அவர் உளவுத்துறை கண்காணிப்பிலும் இருந்து வந்து உள்ளார். ஜமேஷா முபின் தற்கொலைப்படையாக செயல்பட வாய்ப்பு குறைவு. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து சட்டப்பிரிவுகள் 174, வெடி பொருள் தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையில் மேலும் அசாம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கை துப்பு துலக்க போலீஸ் அதிகாரிகள் 6 பேர் கொண்ட தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story