ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு: ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்


ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு:  ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 5:44 AM GMT (Updated: 25 Aug 2023 6:08 AM GMT)

ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ந்தேதி இருதரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து இரு நீதிபதிகள் அமர்வு அதிரடியான தீர்ப்பை வழங்கி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நீதிபதிகள் கூறுகையில்,

அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


Next Story