ராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் பெரோஸ்பூர் வரை நீட்டிப்பு


ராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் பெரோஸ்பூர் வரை நீட்டிப்பு
x

ராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் பெரோஸ்பூர் வரை நீட்டிப்பு செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் ராணுவ கன்டோண்மென்ட் ரெயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. பாம்பன் கடலில் புதிய ரெயில் பால கட்டுமான பணிகள் நடந்து வருவதால் இந்த ரெயில் தற்போது மானாமதுரையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.20974) மானாமதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் நள்ளிரவு 11.10 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.45 மணிக்கு அஜ்மீர் ரெயில் நிலையம் சென்றடையும். வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெரோஸ்பூர் கன்டோண்மென்ட் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.20973) வருகிற 7-ந் தேதி முதல் பெரோஸ்பூர் கன்டோண்மென்ட் ரெயில் நிலையத்தில இருந்து சனிக்கிழமைகளில் அதிகாலை 5.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு அஜ்மீர் ரெயில் நிலையம் வந்தடையும். திங்கட்கிழமை இரவு 8.15 மணிக்கு மானாமதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில்கள், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, கூடூர், நெல்லூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹர்சா, சந்திரபூர், நாக்பூர், பெட்டூல், இட்டார்சி, போபால், மக்சி, தீவாஸ், இந்தூர் லட்சுமிபாய் நகர், பத்தேபாத், ரத்ளம், மான்ட்சோர், நிமாச், சித்தார்கார்க், பில்வாரா, அஜ்மீர், கிசான்கார்க், ஜெய்ப்பூர், ரிங்காஸ், சிகார், சூரு, சாதுல்பூர், தாசில் பத்ரா, நோகர், எல்லீனாபாத், ஹனுமன்கர்க், சங்காரியா, மந்தி தப்வாலி, பிதர் மற்றும் பதின்டா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை இணைக்கும் வகையில் உள்ள சித்தார்கார்க்-நிமாச் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை அகலப்பாதையை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பயணிகளின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story