நீட் தேர்வுக்கு முக கவசம் கட்டாயம்: தேர்வு விதிமுறைகளை அறிவித்தது தேசிய தேர்வு முகமை


நீட் தேர்வுக்கு முக கவசம் கட்டாயம்: தேர்வு விதிமுறைகளை அறிவித்தது தேசிய தேர்வு முகமை
x

தமிழகத்தில் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுத வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) சேருவதற்கான நீட் தேர்வு 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இத்தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் எழுதுகிறார்கள். 497 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு நடைபெறக்கூடிய நகரங்கள், மையங்களை ஏற்கனவே தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியாகவில்லை. இன்று காலை 11.30 மணி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை நீட் தேர்வு ஹால்டிக்கெட் https:/neetnta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதில் முக்கியமாக அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தங்களின் ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு முடிந்த உடன் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக மதியம் 1.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் www.nta.ac.in-ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story