போலி பாஸ்போர்ட் வழக்கு: ராமநாதபுரத்தை சேர்ந்த முக்கிய ஏஜெண்டு கைது - பாஸ்போர்ட்கள், போலி முத்திரைகள் பறிமுதல்
போலி பாஸ்போர்ட் வழக்கில் ராமநாதபுரத்தை சேர்ந்த முக்கிய ஏஜெண்டு் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 105 பாஸ்போர்ட்கள், போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் கடந்த 7-ந்தேதி அன்று மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது, போலியானது என்று தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலி பாஸ்போர்ட், விசா மூலம் மலேசியா செல்ல முயன்ற அந்தோணிசாமியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் கிராமத்தை சேர்ந்த முகமது புரோஷ்கான் (வயது 45), புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த சையது அபுதாஹீர் ஆகியோர் 'பாஸ்போர்ட்', 'விசா' பெற இயலாதவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியாக பாஸ்போர்ட், விசா தயாரித்து வழங்கியது தெரியவந்தது.
இவர்கள் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் என்ற போர்வையில் இந்த மோசடியை அரங்கேற்றி வருவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சென்னை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் வித்தாலிஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் புலன் விசாரணையில் முகமது புரோஷ்கான் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டிலும், தொடர்ந்து தலைமறைவாக உள்ள சையது அபுதாஹீர் வீட்டிலும் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 105 பாஸ்போர்ட்கள், போலி விசாக்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு போலி அரசாங்க முத்திரை மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயர்களிலான முத்திரைகள், போலி ஆவணங்கள் சிக்கின. மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், பிரிண்டர், பணம் எண்ணும் எந்திரம், ரூ.57 ஆயிரம் பணம், சிங்கப்பூர் டாலர் 1000, தாய்லாந்து நாட்டு பணம் 15 ஆயிரத்து 500 (பாத்) உள்ளிட்டவைகளும் சிக்கின. இதனை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் முகமது புரோஷ்கான் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சையது அபுதாஹீரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.