வேட்புமனுவில் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் சாட்சியாக சேர்ப்பு.!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சஞ்சய் காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மிலானி. இவர் கடந்த மாதம் சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு ஆன்லைன் மூலம் ஒரு புகார் மனு அனுப்பினார். அதில், 'முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் சொத்து விவரம் பற்றிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்கள் அளித்து உள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அதில் உண்மை தன்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். மேலும் விசாரணை அறிக்கையை மே மாதம் 26-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு கலைவாணி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த மனு குறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி விசாரணை நடத்தினார். இந்த நிலையில் விசாரணை அறிக்கையை அவர் நேற்று சேலம் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், புகார்தாரரான மிலானி கொடுத்த மனுவில் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தை சாட்சியாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைசேர்த்துள்ளனர்.
அதாவது, எடப்பாடி பழனிசாமி தாக்கல்செய்த பிரனாம பத்திரத்தில் கடந்த 2021ம் ஆண்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கையொப்பமிட்ட நிலையில், அவரையும் இந்த வழக்கின் சாட்சியாக சேர்த்திட புகார்தாரர் கொடுத்த மனுவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தையும் மத்திய குற்றபிரிவு போலீசார் விசாரிப்பார்களா என்பது பின்னர் தெரியவரும்.
குறிப்பாக, ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.