தொடர் மழையால் நெற்பயிர் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர் மழையால் நெற்பயிர் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மழையின்றி கருகிய வானம்பார்த்த நெற்பயிர்களுக்கு பயன்தருவதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மழையின்றி கருகிய வானம்பார்த்த நெற்பயிர்களுக்கு பயன்தருவதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந் தேதி தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஆரம்பம் நன்றாக பெய்தது.

ஆனால், அதன்பின்னர் மழை பெய்யவில்லை. மழைபெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு மழைபெய்யாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மழைபெய்யும் என்று விடாத நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில் பனி பொழிவு ஏற்பட்டதுடன் பகல்வேளைகளில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகாலையில் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர் மழை

தேவையான நேரத்தில் மழை பெய்யாததால் பயிர்கள் பல பகுதிகளில் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்திருந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று வருகின்றன. இந்த நீரில் கொசுக்கள் பெருகி பகலிலும் இரவிலும் மக்களை கடித்து வருகிறது. கொசுக்களால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பருவநிலை மாறி குளிர்ச்சி நிலவுகிறது.

இந்த மழையால் பல பகுதிகளில் குறிப்பாக வானம்பார்த்த விவசாய பகுதிகளில் நெல்பயிர்கள் முன்னரே கருகிவிட்டதால் பயனில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தாமதமாக விவசாய பணிகளை மேற்கொண்ட ஒருசிலர் மழையால் தங்களின் பயிர் தற்போதைக்கு தப்பியதாக ஆறுதல் அடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட விவசாய சங்க தலைவர் முத்துராமு கூறியதாவது:- பருவமழைக்கு முன்னர் பெய்த மழை மற்றும் வைகை தண்ணீர் காரணமாக கண்மாய் பாசன விவசாயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், வானம் பார்த்த விவசாய பகுதிகளில் பல இடங்களில் மழையின்றி நெற்பயிர்கள் கருகிவிட்டன. குறிப்பாக முதுகுளத்தூர், கடலாடி போன்ற பகுதிகளில் விவசாயிகள் பயிர்களின் நிலையை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர். இருப்பினும் இந்த மழையால் கருகிய பயிர்களும் துளிர்விட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால்தான் பயிர்கள் தப்பி பிழைக்கும் நிலை உள்ளது. ஏனெனில் பயிர்களுக்கும் மண்ணிற்கும் இன்னும் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது.

மழையால் விவசாயத்திற்கு நன்மைதான். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story