5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய கோரி 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி
பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.33 நிர்ணயம் செய்ய கோரியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரியும் கடந்த 1-ந் தேதி முதல் நாக்குபெட்டா சீமை படுகர் நலச்சங்கம் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 5-வது நாளான நேற்று உண்ணாவிரத போராட்டத்தை பெத்தளா ஊர் தலைவர் கிருஷ்ணன், 6 ஊர்த்தலைவர் முருகன், பையங்கி தலைவர் மனோகரன், குன்னியட்டி தலைவர் ராஜூ, அட்டவளை தலைவர் ஆண்டி, நாரகிரி சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற விவசாயிகள் தேயிலை கொழுந்து இலைகளை காதில் வைத்தும், கைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரியில் சிறு, குறு தேயிலை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி இருந்தனர். இதில் பெண்களும் கலந்துகொண்டனர். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல ஊட்டி பகுதியில் உள்ள சோலூர், கள்ளக்கொரை கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தகிரி அருகே பெத்தளா, பையங்கி, குன்னியட்டி, அட்டவளை, நாரகிரி கிராமங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.