8-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


8-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2023 12:45 AM IST (Updated: 9 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 விலை வழங்க கோரி நீலகிரியில் 8-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மேலும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கு தேயிலை வாரியம் அழைப்பு விடுத்தது.

நீலகிரி

ஊட்டி

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 விலை வழங்க கோரி நீலகிரியில் 8-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மேலும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கு தேயிலை வாரியம் அழைப்பு விடுத்தது.

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதை நம்பி 65 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். பச்சை தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்காததால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரதமர், மத்திய வர்த்தகத்துறை மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. இருப்பினும், பச்சை தேயிலை பிரச்சினைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விவசாய சங்கத்தினர் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்யக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

அதன்படி நேற்று தங்காடு, எப்பநாடு, பிக்கட்டி உள்ளிட்ட இடங்களில் 8-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தங்காடு பகுதியில் நடந்த போராட்டத்திற்கு நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். போராட்டம் நடக்கும் இடத்தில் பச்சை தேயிலை கொட்டி வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி 400 கிராமங்களில் இருந்து 65 ஆயிரம் விவசாயிகளுடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். இதற்கிடையே தேயிலை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேயிலை வாரியம் நேற்று அழைப்பு விடுத்து உள்ளது. இதில் தேயிலை வாரியம் கொடுக்கும் உறுதியின் அடிப்படையில் தான் இன்று (சனிக்கிழமை) போராட்டம் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நடந்த போராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் பந்திமை, இளித்தொரை, எடப்பள்ளி, பெட்டட்டி, கோடமலை, கோத்தகம்பை கிராமத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கோத்தகிரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் குயிலரசன் ஆகியார் தலைமையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Next Story