சூளகிரி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்
3-வது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், சூளகிரி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள், தாசில்தாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
சூளகிரி:-
3-வது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், சூளகிரி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள், தாசில்தாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
விவசாயிகள் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் 3-வது சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்காக ஏறக்குறைய 80 சதவீத விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் மீண்டும் சிப்காட் பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன் தலைமையில் சூளகிரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
தாசில்தாரிடம் மனு
அப்போது சிப்காட் அமைப்பு எதிர்ப்பு விவசாயிகள் கூறுகையில், 3-வது சிப்காட் அமைக்க 90 சதவீதத்தினர் விருப்பத்துடன் நிலங்களை தந்துள்ளனர். அந்த நிலங்களில் சிப்காட் அமைக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், குறு, சிறு விவசாயிகள் வாழ்வாதாரமான விளைநிலங்களை கையகப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடாது. உயிரே போனாலும் நிலத்தை கையகப்படுத்த விட மாட்டோம் என்று ஆவேசத்துடன் கூறினர்.
போராட்டத்தில் கோனேரிப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வத்நாராயணன், காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் சக்கார்லப்பா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பால முரளி, நல்லகானகொத்தப்பள்ளி, குண்டுகுறுக்கி, குருபராத்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், சூளகிரி தாசில்தார் அனிதா, சிப்காட் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட குழு நிர்வாகிகள் மனு அளித்தனர்.