நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் :கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்


நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் :கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

கள்ளக்குறிச்சி

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் காப்பீடு திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டிற்கு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த நெல் சம்பா-II, மக்காச்சோளம்-II, பருத்தி-1 உளுந்து, மணிலா, கரும்பு, மரவள்ளி, கத்தரி மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களில் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்டஈடு வழங்கி வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல் (சம்பா) -II பயிருக்கு 15.11.2023-ந்தேதி வரையும், மக்காச்சோளம்-II, பருத்தி-II ஆகிய பயிர்களுக்கு 31.10.2023, உளுந்து பயிருக்கு 15.11.2023, மணிலா பயிருக்கு 30.12.2023, கரும்பு பயிருக்கு 30.3.2024, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி பயிருக்கு 29.2.2024, கத்தரி மற்றும் வெங்காய பயிருக்கு 31.01.2024-ந் தேதி வரையும் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்து கொள்ளலாம்

காப்பீட்டுக்கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.487, மக்காச்சோளத்திற்கு ரூ.296, பருத்திக்கு ரூ.484, உளுந்து பயிருக்கு ரூ.207, மணிலா பயிருக்கு ரூ.427, கரும்பு பயிருக்கு ரூ.2,717, மரவள்ளி பயிருக்கு ரூ.1,499, கத்தரி பயிருக்கு ரூ.808 மற்றும் வெங்காயம் பயிருக்கு ரூ.884 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டுத்தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கு தேவையான ஆவணங்கள் நடப்பு பருவ அடங்கல் (பசலி ஆண்டு 1433), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவையாகும். பதிவு செய்யும் போது விவசாயியின் பெயர், இருப்பிடம், நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக பதிவு செய்து கொள்ளவேண்டும்.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story