ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்- விவசாயிகள்


ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்- விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Jun 2023 7:15 PM GMT (Updated: 26 Jun 2023 7:39 AM GMT)

காவிரி நீர் கடைமடைக்கு செல்லும் வரை ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

மேட்டூர் அணை

காவிரி டெல்டாவின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு டெல்டா மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 போகம் நெல் விளைவிக்கிறார்கள்.

இதில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்த உடன் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய் எனும் புது ஆறு உள்ளிட்ட ஆறுகளுக்கு பிரித்து அனுப்பப்படும். இந்த தண்ணீர் கடைமடை வரை சீராக சென்றடைந்தால் தான் விவசாயிகள் சிரமமின்றி சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும்.

டெல்டா பாசனம்

வழக்கம்போல் இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி டெல்டா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கல்லணையை 16-ந் தேதி வந்ததை தொடர்ந்து அங்கிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் 2,805 கன அடி, வெண்ணாற்றில் 2,806 கன அடி, கல்லணைக் கால்வாயில் 1,412 கன அடி, கொள்ளிடத்தில் 780 கன அடி என பிரித்து வழங்கப்படுகிறது.

போதுமானதாக இல்லை

இந்த நான்கு பிரதான ஆறுகளில் இருந்தும் தலா 20-க்கும் மேற்பட்ட துணை ஆறுகள் மூலம் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த தண்ணீர் கடைமடை பகுதிகள் வரை செல்வதற்கு போதுமானதாக இல்லை. அப்படியே சென்றாலும் ஆறுகளை தாண்டி சாகுபடி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் திறந்து விடப்படும் தண்ணீர் உரிய பலனை தரவில்லை.

எனவே வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி என தண்ணீர் திறந்து கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்ற பின், அங்கிருந்து படிப்படியாக ரெகுலேட்டர் மூலம் தண்ணீரை தேக்கி வைத்து சாகுபடி பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஓடம்போக்கி ஆறு

திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் 2 நாட்களுக்கு முன்பு வரை சற்று கூடுதலாக தண்ணீர் வரத்து இருந்தது. தற்போது தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இது போல் இல்லாமல் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றதை உறுதிப்படுத்தும் வரை முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும்.

ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், அணையில் 100 அடியை நெருங்கி தண்ணீர் இருப்பதாலும், குறுவை சாகுபடி பணிகளை நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளோம். இந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஆறுகளில் தண்ணீர் வந்த சில நாட்களிலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story