கரும்பு சாகுபடியில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு - விவசாயிகள்


கரும்பு சாகுபடியில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு - விவசாயிகள்
x
தினத்தந்தி 26 Dec 2022 7:00 PM GMT (Updated: 26 Dec 2022 7:00 PM GMT)

கரும்பு சாகுபடியில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மயிலாடுதுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஆண்டுதோறும் பணத்துடன், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும்போது அதில் பொங்கல் வைக்க பயன்படுத்தும் செங்கரும்பும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு முழு கரும்பை தமிழக அரசு வழங்கியது. கடந்த ஆண்டும் (2021) முழு கரும்பு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்பட்டது. இதன் காரணமாக கரும்பு விவசாயிகள் இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி மேற்கொண்டனர். ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை.மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு பல நூறு ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால், கரும்பை அரசு கொள்முதல் செய்ய வாய்ப்பில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.ஏக்கருக்கு 1½ லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். மாண்டஸ் புயலில் வீசிய காற்று காரணமாக விழுந்த கரும்புகளை சீர் செய்ய கூடுதல் செலவும் செய்துள்ளனர். இந்த நிலையில் கரும்பை கொள்முதல் செய்யாததால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள். எனவே அரசு முறைப்படி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Next Story