விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
x

விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை,

வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் குறைந்தது 40 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை விளைச்சல் குறைந்திருக்கிறது. குறுவையை தொடர்ந்து சம்பா பருவத்திலும் விளைச்சல் வீழ்ச்சி அடைந்து விட்டதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

குறுவை பயிர்கள் கருகிய நிலையில், அதற்காக வாங்கிய கடனை இன்னும் திரும்ப செலுத்தாத விவசாயிகள், இப்போது சம்பா சாகுபடி வீழ்ச்சி அடைந்ததால் கூடுதல் கடனை சுமக்கவேண்டியுள்ளது. இதிலிருந்து அவர்களால் மீளவே முடியாது.

விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுமையாகவும், 1.5 லட்சம் ஏக்கரில் ஓரளவுக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 400 என்ற அளவில் தான் தமிழக அரசு இழப்பீடு வழங்கியது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. சம்பா பயிர்களின் விளைச்சல் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு வாயை திறக்கவில்லை.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், காலப்போக்கில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய விவசாயிகளே இருக்க மாட்டார்கள். அதன்பின் அரிசிக்காக நாம் பிற மாநிலங்களிடம் கையேந்தவேண்டிய நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கவேண்டும். அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story