16-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி 16-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கோத்தகிரி
பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.33.75 நிர்ணயிக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரை மற்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், தேயிலை வாரியம் உடனடியாக 30 ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 16-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனை நாக்குபெட்டா படுகர் நல சங்க தலைவர் பாபு, சக்கத்தா ஊர் தலைவர் பெள்ளிராஜ், தும்பூர் ஊர் தலைவர் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தும்பூர், சக்கத்தா கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். மேலும் கோத்தகிரி பஸ் நிலைய வாடகை டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் சங்க தலைவர் வடிவேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் ஊட்டி அருகே கேத்தி, கிண்ணக்கொரை பகுதிகளிலும் தேயிலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.