விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வனவிலங்குளால் ஏற்படும் பயிர் மற்றும் மனித உயிர் சேதத்தை தடுக்கக்கோரி கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் முகமது அலி, மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
கோரிக்கைகள்
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வனத்துறை மூலம் சோலார் மின்வேலி அமைத்து கொடுக்க வேண்டும், காட்டுப்பன்றிகள் பயிர்களை அதிகமாக சேதப்படுத்தும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ளது போல் காட்டுப் பன்றிகளை அழிப்பதற்கு உரிய அரசாணை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும், வனவிலங்குகள் நடமாட்டத்தை குறைக்க வேளாண்மை மற்றும் வனத்துறையினர் பரிந்துரைத்துள்ள மருந்துகள், வாசனை திரவியங்களை முழு மானியத்தில் வழங்க வேண்டும், வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ரூ.25 லட்சம்மாக உயர்த்தி ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும், பயிர் சேதத்துக்கு முழுமையான நஷ்ட ஈடு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஜோதி ராமன், ஏழுமலை, தெய்வீகன், நாகராஜன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.