விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2023 2:00 AM IST (Updated: 12 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூரில், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வனவிலங்குகள் அட்டகாசம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் நபரின் குடும்பத்தை அரசு தத்து எடுக்க வேண்டும், வனவிலங்குகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வனத்துக்குள்ளேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க தனிக்குழு அமைக்க வேண்டும், வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் நபரின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், தேவர்சோலை பகுதியில் கால்நடைகளை கொன்று வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

விவசாயிகளுக்கு பாதிப்பு

இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் என்.வாசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யோகன்னன், நிர்வாகிகள் குஞ்சு முகமது, சி.கே.மணி, அமீது, கோபி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பேசினர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து வாழை உள்ளிட்ட பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story