நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்


நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்
x

கும்பகோணம் வட்டாரத்தில் பெய்து வரும் மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உர செலவு வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம் வட்டாரத்தில் பெய்து வரும் மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உர செலவு வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சம்பா, தாளடி சாகுபடி

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மேலும் பல விவசாயிகள் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் நகரப் பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழியத் தொடங்கி உள்ளது. மேலும் நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாகுபடி நிலங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உர செலவு வீண்

இதுகுறித்து சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில்,

'சம்பா பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பயிருக்கு தேவையான மேலுரம் இட்டு பயிர்களை பாதுகாத்து வந்தோம். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பயிர்களுக்கு தெளித்த மருந்துகள் மழையில் வீணாகி வீண் செலவாகி போனது.

இதோடு தற்போது வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதே போல் வாழை, கரும்பு தோட்டங்களிலும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏறபட்டுள்ளது. எனவே உரிய ஆய்வு மேற்கொண்டு பயிர்களின் இழப்பை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அய்யம்பேட்டை

வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருந்தபோதும் அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை, வெயில் இன்றி குளிர்ந்த சூழல் நிலவியது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. அய்யம்பேட்டை, பசுபதி கோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, மகாளிபுரம், கணபதி அக்ரகாரம், வீரமாங்குடி, பட்டுக்குடி, பெருமாள் கோவில், உள்ளிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் பலரும் மிகவும் அவதியடைந்தனர்.

குண்டும், குழியுமான சாலை

குறிப்பாக குண்டும், குழியுமான தஞ்சை - கும்பகோணம் நெடுஞ் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்தனர். மழையால் சம்பா, தாளடி நடவு செய்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல வயல்களில் நடவு பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அதேபோல கொள்ளிடம், காவிரி ஆற்றின் படுகை பகுதிகளில் செங்கல் சூளை பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த மழையால் செங்கற்கள் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.


Next Story