குவியல், குவியலாக குவிந்து கிடக்கும் நெல்மணிகள்


குவியல், குவியலாக குவிந்து கிடக்கும் நெல்மணிகள்
x

பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் மந்தம் காரணமாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. தாங்கள் விளைவித்த நெல்லை, இரவு பகலாக விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் மந்தம் காரணமாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. தாங்கள் விளைவித்த நெல்லை, இரவு பகலாக விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள்.

கொள்முதல் பணிகள் மந்தம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேண்டாக்கோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கடந்த மாதம்(பிப்ரவரி) 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இடையில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கின.

ஆனால் இங்கு தற்போது நெல் கொள்முதல் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வது மிகவும் குறைவாக உள்ளது.

குவியல், குவியலாக குவித்து வைப்பு

இதனால் விளைவித்த நெல் மணிகளை விற்பதற்காக கொள்முதல் நிலையத்துக்கு வாகனங்களில் கொண்டு வந்த விவசாயிகள், உடனுக்குடன் நெல்லை விற்க முடியாததால் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

நெற்றி வியர்வை சிந்தி நிலத்தில் பாடுபட்டு தாங்கள் விளைவித்த நெல் மணிகளை ஆங்காங்கே குவித்து வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் நெல் கொண்டு வருவதை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், பார்வையிட்டு அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

நெல் மூட்டைகள் வைக்க இடமில்லை

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, இந்த கொள்முதல் நிலையத்தை சுற்றி உள்ள முதல்சேரி, பள்ளிகொண்டான், சேண்டாக் கோட்டை, மாளியக்காடு, தொக்காளிக்காடு, காசாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளையக்கூடிய நெல்மணிகளை விவசாயிகள் கொண்டு வந்து இந்த கொள்முதல் நிலையத்தில் கொடுக்கின்றனர்.

கடந்த மாதம்(பிப்ரவரி) 1-ந் தேதி முதல் பிடித்த நெல் மூட்டைகள் அடுக்கடுக்காக இங்கே வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்த சூழ்நிலையில் நெல் மூட்டைகளை வைக்க இடமில்லாததால் தற்போது 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நாங்கள் கொண்டு வந்த நெல்மணிகளை அப்படியே கொட்டி வைத்து தார்ப்பாய்களை போட்டு மூடி வைத்து பாதுகாத்து வருகிறோம்.

உடனுக்குடன் கொள்முதல்

திடீரென கோடை மழை பெய்தால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மணிகள் முளைத்து விடும் அபாயம் உள்ளது. இங்கே நெல்மணிகள் குவியலாக குவித்து வைக்கப்பட்டு இருப்பதால் அடுத்ததாக அறுவடை செய்யக்கூடிய நெல்மணிகளை கொண்டு வந்து வைக்க கூட இடமில்லாத காரணத்தினால் பெரும் கவலையில் இருக்கிறோம்.

எனவே விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story