விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி வேண்டுகோள்


விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி வேண்டுகோள்
x

விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் என்று வேளாண் அதிகாரி அசோக் வேண்டுகோள் விடுத்தார்.

செங்கல்பட்டு

உழவன் செயலி

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் உழவன் செயலி என்ற செயலி உருவாக்கப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான 23 வகையான சேவைகள் இந்த செயலி மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 24-வது சேவையாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தை அறிந்து அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ் மண்வளம் என்ற புதிய இணைய முகப்பு (http://tnagriculture.in/mannvalam) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக, மண் வளம் குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களது செல்போனில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும். இந்த இணைய முகப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு

தவிர இந்த செயலியின் மூலம் மானிய திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு, உரம் இருப்பு நிலை, விதைகளின் இருப்பு நிலை, வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு, சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், உதவி வேளாண்மை அலுவலர் வருகை விவரம், பயிர் சாகுபடி வழிகாட்டி, இயற்கை விவசாய விளைபொருட்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்களின் பொருட்கள், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், விவசாயிகளின் கருத்துகள், பூச்சி நோய் தாக்குதல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகளின் பரிந்துரைகள், அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், உழவன் இ-சந்தை, பட்டு வளர்ச்சி துறை, வேளாண் நிதிநிலை அறிக்கை, குறிப்பாக அரசின் முன்னோடி திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்ற குழுவாக பதிவு செய்ய வழிவகை, கால்நடை மருத்துவர், பசுமை இயக்க மரக்கன்றுகள் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன் ஆகிய இரண்டு விதமான செல்பொன்களிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story