திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணம் - 114 பேர் கைது


திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணம் - 114 பேர் கைது
x

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணமாக சென்றனர். அனுமதியின்றி நடைபயணம் மேற்கொண்ட 114 விவசாயிகள் கைதாகினர்.

திருவள்ளூர்

திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்பை அரவைக்காக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரும்பு விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில செயலாளர் பெருமாள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:- திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கி 39 ஆண்டுகள் ஆன நிலையில் அரவை திறன் குறைந்துள்ளதால், அடிக்கடி எந்திரங்கள் பழுதாகி ஆலை நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை சீரமைத்து மேம்படுத்த வேண்டும். இணை மின் உற்பத்தியுடன் எத்தனால் உற்பத்தி செய்திட வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் கோட்டா முறையை கைவிட வேண்டும். வெட்டுக் கூலி பிரச்சினையை முறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆலையின் மேலாண்மை இயக்குனர் தேன்மொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கையில் கரும்புகளுடன் திருவாலங்காடு சர்க்கரை ஆலை நுழைவு வாயில் முன்பு இருந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நடை பயணமாக சென்றனர். அவர்களை திருவாலங்காடு தேரடி அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி நடைபயணம் சென்றதாக கூறி 114 விவசாயிகளை கைது செய்தனர்.

கரும்பு விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story