காதல் திருமணம் செய்த பெண் கொலை வழக்கில் தந்தை கைது


காதல் திருமணம் செய்த பெண் கொலை வழக்கில் தந்தை கைது
x

காதல் திருமணம் செய்த பெண் கொலை வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார்.

திருச்சி

தா.பேட்டை:

வனப்பகுதியில் பிணம்

திருச்சி மாவட்டம், துறையூர்-நாமக்கல் சாலையில் தா.பேட்டை அருகே தேவரப்பம்பட்டி வனப்பகுதியில் கடந்த 22-ந்தேதி சாலையின் சிறிது தூரத்தில் முட்புதர் அருகே இளம்பெண் பிணமாக கிடப்பதாக ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண் தா.பேட்டையை அடுத்த ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த அறிவழகனின் மகள் பிரியங்கா(வயது 20) என்பதும், இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மகாதேவி மலையப்ப நகர் பகுதியை சேர்ந்த சீனுபிரசாத் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

தந்தை கைது

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்காவின் தந்தை அறிவழகன் (50) நேற்று ஊரக்கரை கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வன் முன்னிலையில் சரணடைந்தார். இதையடுத்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் போலீசார் அறிவழகனை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் பிரியங்கா ஒழுங்கீனமாக நடந்து கொண்டதுடன், பல ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்தார். பெற்றோர், உறவினர்கள் பேச்சை மதிக்காமல் சுற்றித்திரிந்தார். பலமுறை கண்டித்தும் பிரியங்கா தனது பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ளவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். பிரியங்காவிற்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை பிரியங்காவின் நடத்தையினால் பாழாகி விடுமோ? என்று பயந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பிரியங்காவை கொலை செய்ய முடிவு செய்தேன்.

கழுத்தை நெரித்து...

கடந்த 21-ந்தேதி நாமக்கல்லில் இருந்து பிரியங்கா, என்னிடம் செல்போனில் பேசினார். அப்போது தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து நாமக்கல் சென்று உறவினரிடம் பெற்ற மோட்டார் சைக்கிளில் பிரியங்காவை ஏற்றிக்கொண்டு தேரப்பம்பட்டி வனப்பகுதி வழியாக சென்றேன். அங்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றபோது, பிரியங்கா என்னை மரியாதை குறைவாக பேசியதால் ஆத்திரம் ஏற்பட்டது.

இதனால் நமக்கு அவமானமாக உள்ளது என்று எண்ணி பிரியங்காவை அடித்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்று காலால் கழுத்தை மிதித்தும், கையால் கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று விட்டேன். போலீசார் தீவிரமாக விசாரித்து என்னை தேடுவதை அறிந்தும், குற்ற உணர்ச்சி ஏற்பட்டதாலும் சரணடைந்தேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்தது எப்படி? என்பதை நடித்துக்காட்ட செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story