மகளின் காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை: மதுரையில் பரபரப்பு
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளின் காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை,
மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 28). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கார்த்திக், தனது உறவினரான மணி என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது காதலுக்கு மணி வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே வந்த கார்த்திக்கை, காதலியின் தந்தை மணி மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் அவருக்கு முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொலையான கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளின் காதலன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அவனியாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.