புதர் சூழ்ந்த வீடுகளில் வசிப்பதால் அச்சம்:புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்-ஆதிவாசி மக்கள் கோரிக்கை


புதர் சூழ்ந்த வீடுகளில் வசிப்பதால் அச்சம்:புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்-ஆதிவாசி மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2023 7:30 PM GMT (Updated: 6 July 2023 7:30 PM GMT)

அய்யன்கொல்லி அருகே புதர் சூழ்ந்த வீடுகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் அச்சத்துடன் உள்ளதால் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

நீலகிரி

பந்தலூர்

அய்யன்கொல்லி அருகே புதர் சூழ்ந்த வீடுகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் அச்சத்துடன் உள்ளதால் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

அச்சத்துடன் ஆதிவாசி மக்கள்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே செறியேரி ஆதிவாசி காலனியில் 10 -க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இதில் அவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்தது. அதனால் அந்த வீடுகளை சீரமைக்க ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை. இதனால் வீடுகளின் மேற்கூரைகளும் சுவர்களும் இடிந்து விழுந்தன. இதனால் ஆதிவாசி மக்கள் அச்சத்துடன் அங்கு வசித்து வருகிறார்கள். ஒரு சில வீடுகளில் மேற்கூரை பழுதடைந்து மழை நீர் உள்ளே கசிவதால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். தற்போது 4 தொகுப்பு வீடுகள் மட்டுமே உள்ளது. அந்தவீடுகளில் தான் இரண்டு, மூன்று குடும்பங்களாக ஆதிவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது பெய்து வரும் பலத்த மழையால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

புதிய தொகுப்பு வீடுகள்

இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:- செறியேறி ஆதிவாசி காலனியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பல ஆண்டுகள் கடந்து விட்டதால் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் முட்புதர்கள், செடி-கொடிகள் வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக வீட்டுக்குள் விஷப்பூச்சிகள் வந்து விடுகின்றன.

இதேபோல் எங்கள் குடியிருப்பில் போதிய குடிநீர் வசதியும் இல்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அதனால் விரைவில் 4 வீடுகளை இடித்துவிட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தந்து, வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். மேலும் குடிநீர் வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story