மத்திய அரசு முயற்சியால் செசல்ஸ் தீவு சிறையில் இருந்து விடுதலை: கன்னியாகுமரி மீனவர்கள் தாயகம் திரும்பினர்


மத்திய அரசு முயற்சியால் செசல்ஸ் தீவு சிறையில் இருந்து விடுதலை: கன்னியாகுமரி மீனவர்கள் தாயகம் திரும்பினர்
x

மத்திய அரசு முயற்சியால் செசல்ஸ் தீவு சிறையில் இருந்து விடுதலையான கன்னியாகுமரி மீனவர்கள் தாயகம் திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் வரவேற்றனர்.

சென்னை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை மீனவர் கிராமங்களை சேர்ந்த 61 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள செசல்ஸ் தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் முயற்சியால் 56 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 5 மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் டெல்லியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா, இணை மந்திரி எல்.முருகன், வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் ஆகியோரை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ.க. மீனவர் அணியின் முன்னாள் தலைவரும், மாநில செயலாளருமான எஸ்.சதீஷ்குமார் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசின் முயற்சியால் 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் மீனவரணி தலைவர் முனுசாமி, துணை தலைவர் கொட்டிவாக்கம் மோகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் 5 பேரும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story