மின்னல் தாக்கி பெண் கட்டிட தொழிலாளி பலி


மின்னல் தாக்கி பெண் கட்டிட தொழிலாளி பலி
x

மின்னல் தாக்கி பெண் கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

கோடை மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்தாலும், மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.

பெரம்பலூரில் நேற்று மாலை 3.15 மணிக்கு திடீரென்று பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் வெளுத்து வாங்கியது. மழை பெய்யும்போது இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசியது.

சாவு

இந்த நிலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே முத்துலட்சுமி நகரில் குன்னம் தாலுகா, அந்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த பூமாலை என்பவர் புதிதாக கட்டி வரும் ஒரு வீட்டின் மேல்தளத்தில் கட்டிட பணியில் ஒரு கொத்தனார், 10 தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது மாலை 4 மணியளவில் அந்த வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் அருகே நெடுவாசலை சேர்ந்த முருகேசனின் மனைவி சாவித்திரி (வயது 34) மீது மின்னல் தாக்கியது.

இதில் மயங்கி விழுந்த சாவித்திரியை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சாவித்திரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2-வது உயிரிழப்பு

சாவித்திரியின் கணவர் முருகேசன் கடந்த ஒரு வருடமாக துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் (14), ஜீவா (12) என 2 மகன்களும், பவிஷா (2½) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவா் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண தொகையை விரைந்து பெற்றுக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் கோடை மழையின்போது இடி, மின்னலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆங்காங்கே இடி தாங்கி பொருத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து, இடி தாங்கி பொருத்துவதற்கும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story