பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை


பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை
x

பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களது சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

என்ஜினீயர் தம்பதி

கடலூர் மாவட்டம், தொழுதூர் தாலுகா, ராமநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயா (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ள இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பென்னகோணத்தை சேர்ந்த கண்ணனின் மகன் விஜயகுமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் நிகிதா, நிகிசா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். என்ஜினீயரான விஜயகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் விஜயகுமாரின் தந்தையும், அண்ணன் வினோத்தும் துபாயில்தான் வேலை பார்த்து வருகின்றனர்.

கணவர் வீட்டில் தங்கினார்

இந்நிலையில் விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்றதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி கடந்த சில மாதங்களாக துபாயில் இருந்துவிட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சொந்த ஊர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி தமிழ்ச்செல்வி அழைத்ததன்பேரில் ஜெயா குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு வந்தார். அங்கு முதல் தளத்தில் உள்ள அறையில் ஜெயா குழந்தைகளுடன் தங்கியிருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் ஜெயா தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வி காலை 9 மணியளவில் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

தூக்குப்போட்ட நிலையில்...

அப்போது அறையின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் ஜெயா தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அருகே 2 பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் வீட்டின் முன்பு பொதுமக்கள் கூடினர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து ஜெயா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் மர்மம்

தங்களது மகள், பேத்திகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் அண்ணன் வினோத்குமாரின் மனைவி பிரியா ஆகியோர் ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மேலும் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் ஜெயாவின் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தைகளை கொன்று ஜெயா தற்கொலை செய்திருந்தால், அதற்கான காரணம் என்ன?, அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா?, அல்லது அவரும், குழந்தைகளும் கொலை செய்யப்பட்டனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்களை வாங்க மறுப்பு

இதற்கிடையே பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஜெயா மற்றும் குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களது உடல்களை வாங்க ஜெயாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்தனர். இதையடுத்து அவர்களுடன், போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், ஜெயா மற்றும் குழந்தைகளின் உடல்களை பெற்றுச்சென்றனர்.


Next Story