பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருமங்கைஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பானுமதி. கணேசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகள் பாக்கியலட்சுமி (வயது 14). பானுமதி கஷ்டப்பட்டு தனது ஒரே மகள் பாக்கிய லட்சுமியை படிக்க வைத்தார். 9-ம் வகுப்பு படித்து வந்த பாக்கியலட்சுமி கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் இறந்து போனார். கணவரும், மகளும் இறந்து விட்ட துக்கத்தில் பானுமதி இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு பானுமதி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.