தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்


தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
x

40 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு அளிக்கும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றது. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி உள்ளன.

விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டுமே தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மற்ற கட்சிகள் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுக்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக்கொள்வார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி இல்லாத நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை பெறுவார்.

வேட்புமனு விண்ணப்பங்களை, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தை கம்ப்யூட்டரிலேயே தட்டச்சு செய்து பூர்த்தி செய்து, அச்சு நகல் எடுத்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கலாம். ஆன்லைன் மூலமாக பிரமாணப் பத்திரத்தை, சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. வேட்பு மனுவுடன் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்தை அளிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான டெபாசிட் தொகை ரூ.12 ஆயிரத்து 500 ஆகும்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டும் (மொத்தம் 5 பேர்) உடன் செல்லலாம். வேட்புமனுக்கள் பெறப்படும் நிகழ்வு கண்டிப்பாக வீடியோ பதிவு செய்யப்படும். வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்பாளரின் வாகனத்துடன் வரும் மற்ற வாகனங்களில் பயணிப்போரின் தேர்தல் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்படும்.

இதேபோல, ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பிருந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை புதிய வங்கி கணக்கினைப் பராமரிக்க வேண்டும். அந்த வங்கி கணக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் வழங்க வேண்டும். புகைப்படத்தில் கட்சி சின்னம், கொடி குறித்த எந்த அடையாளமும் இருக்கக்கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்களாக இருந்தால் ஒரு முகவரும், இதர வேட்பாளராக இருந்தால் 10 முகவராலும் முன்மொழியப்பட்டிருக்க வேண்டும். முன்மொழியும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்புமனுக்கள் பெறப்படும். 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை. எனவே, 40 தொகுதிகளிலும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story