இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி
வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.
ரூ.3 லட்சம் நிதி உதவி
புதுக்கோட்டை அருகே பூங்குடியில் நாட்டு வெடி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்த 30-ந் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் திருக்கோகர்ணம் அருகே கோவில்பட்டியை சேர்ந்த வீரமுத்து (வயது 31), திருமலை (30), வெள்ளனூரை சேர்ந்த சுரேஷ் (35) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரமணி, குமார் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கோவில்பட்டியை சேர்ந்த வீரமுத்து, திருமலை, வெள்ளனூரை சேர்ந்த சுரேஷ் ஆகியோரின் வீடுகளுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று மாலை சென்றார். மேலும் அவர்களது குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்
இதேபோல விபத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வைரமணி, குமார் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலையினை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜ்மோகன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.