நாமக்கல் அருகே சாலையோரம் முட்டை கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்

நாமக்கல் அருகே சாலையோரம் முட்டை கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று காரில் சென்றார். அப்போது கருப்பட்டிபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே மினி லாரி ஒன்றில் இருந்து முட்டை கழிவுகளை சிலர் சாலையோரம் கொட்டி கொண்டு இருந்தனர். இதையடுத்து அந்த மினி லாரியை கலெக்டர் ஸ்ரேயா சிங் பறிமுதல் செய்ததோடு, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாமக்கல் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற துப்புரவு அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் மினி லாரி உரிமையாளர் ராஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். லாரியின் உரிமையாளர் அபராதத்தை செலுத்தியதை அடுத்து மினி லாரியை நகராட்சி அதிகாரிகள் விடுவித்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லாரி உரிமையாளரிடம், நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.