சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து: அர்ச்சர்கள் இருவருக்கு தீக்காயம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து: அர்ச்சர்கள் இருவருக்கு தீக்காயம்
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உற்சவர அம்மனுக்கு இன்று தீபாராதனை காட்டும்போது இரண்டு குருக்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி கோவிலின் தங்க கொடிமரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.உற்சவர் அம்மன் சன்னதி வெட்டி வேரால் பந்தல் அமைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மற்றும் இன்று மதியம் வரை கட்டணமில்லா தரிசனத்தில் அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கோவில் குருக்கள் குரு என்பவர் கையை மேலே தூக்கி அம்மனுக்கு தீபாராதனை காட்டினார்.அப்போது எதிர்பாராத விதமாக காய்ந்த நிலையில் இருந்த வெட்டிவேர் பந்தலில் தீபட்டு எரியத்தொடங்கியது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குருக்கள் குரு உற்சவர் அம்மன் மீது தீ பட்டுவிடக்கூடாது என்பதற்காக எரிந்து கொண்டு இருந்த பந்தலை பிடித்து இழுத்துள்ளார்.

அப்போது, குருக்கள் மீது தீ பிடித்த பந்தல் சாய்ந்ததில் அவரது நெற்றி, மார்பு, மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த கோவில் பரிஜாரகரான நாகநாதன் என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதற்கிடையில் அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீக்காயம் அடைந்த குரு மற்றும் நாகநாதனை மீட்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் பலத்த காயமடைந்த குரு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பூச்சொரிதல் விழா தொடங்கிய அடுத்த நாளே இந்த சம்பவம் ஏற்ப்பட்டதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு வாஸ்து சாந்தி மற்றும் பரிகார பூஜை செய்யப்பட்டது.


Next Story