தமிழ்நாட்டில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சென்னை,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது.
இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இன்புளூயன்சா காய்ச்சலுக்கு கர்நாடகா, அரியானாவில் மொத்தம் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கடந்த 11-ம் தேதி மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி திருச்சியில் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தார். அவருக்கு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவியதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் உயிரிழந்த இளைஞருக்கு இன்புளூயன்சா வைரஸ் பரவியது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.