செம்மினிப்பட்டியில் மீன்பிடி திருவிழா


செம்மினிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
x

செம்மினிப்பட்டியில் மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

மதுரை

மேலூர்,

செம்மினிப்பட்டியில் மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

மீன்பிடி திருவிழா

மேலூர் தாலுகாவில் உள்ள பாசன கண்மாய்களில் ஊர் கட்டுப்பாடுடன் மீன்களை பிடிக்காமல் மீன்களை பாதுகாத்து வளர்த்து பொதுமக்கள் ஒன்றுகூடி மீன்களை பிடிக்கும் மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகிறது. தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் பொதுமக்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக இலவசமாக மீன்களை பிடிப்பதும், அவ்வாறு பிடித்த மீன்களை விற்பனை செய்வது தெய்வகுற்றம் என்பதால் வீடுகளில் மீன்களை குழம்பு வைத்து சாப்பிடுவது பாரம்பரிய வழக்கமான ஒன்றாகும்.

இதன்படி மேலூர் அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடை பெற்றது. முன்கூட்டியே இதற்கான நாள் குறித்து சுற்று வட்டார கிராம மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிராமமக்கள் நேற்று கரும்பாச்சி கண்மாயை சுற்றி கூடினர்.

கச்சா வலை, ஊத்த கச்சா, பெரிய மீன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மீன்பிடிக்க கிராமத்தாரின் உத்தரவுக்காக தயார் நிலையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

அனுமதி

அப்போது கிராம பெரியவர்கள் பாரம்பரிய வழக்கப்படி சாமிகும்பிட்ட பின் தாங்கள் தலையில் கட்டியிருந்த வெள்ளை துண்டுகளை அவிழ்த்து அதனை கொடிபோல் ஆட்டி மீன்பிடிக்க அனுமதி வழங்கினர். அப்போது கண்மாயை சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான பேர் கண்மாய் தண்ணீருக்குள் பாய்ந்து சென்று போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.

கண்மாயில் கட்லா, விரா, அயிரை, கெண்டை உட்பட பெரிய மீன்களை பொதுமக்கள் பிடித்தனர்.

பிடிபட்ட மீன்களை வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாமிக்கு படையிலிட்ட பின் குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் கிராமங்களில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story