தொடர் மழை காரணமாக சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானங்கள்
நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படக்கூடிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச்சென்றன.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு விடாமல் தொடர்ந்து மழை பெய்தது. மழை காரணமாக விமானிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய பாங்காக், துபாய், கத்தார், இலங்கை, சிங்கப்பூர் போன்ற விமானங்களும், மும்பை, கொல்கத்தா, அந்தமான், விஜயவாடா, மதுரை, திருச்சி போன்ற உள்நாட்டு விமானங்களும் சுமார் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக புறப்பட்டுச்சென்றது.
பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் குறித்த நேரத்தில் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.