வெள்ள பாதிப்பு: தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


வெள்ள பாதிப்பு: தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 24 Dec 2023 9:28 AM GMT (Updated: 24 Dec 2023 9:29 AM GMT)

கனமழையால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது ;

"மிக்ஜம் புயல் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பாடமாக எடுத்துக்கொண்டு, தென் மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கையின்போது திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை கூறிக்கொண்டு பாதிக்கப்பட்ட நான்கு தென்மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகளை செய்யாமல் தட்டிக் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கடந்த வாரம் பெய்த கனமழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டபோது, திமுக அரசின் முதலமைச்சரோ மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி, தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டார்.

கனமழையால் நெல், வாழை, வெற்றிலைக் கொடி போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து, விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். கோழிகள் மற்றும் கால்நடைகளை இழந்துள்ளனர். கடற்கரை ஓரங்களில் உள்ள உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி 100 சதவீதம் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. கடை வீதியில் உள்ள கடைகளில் இருந்த உரமூட்டைகள், அரிசி, நெல் மூட்டைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம் உட்பட அரசு அலுவலகங்கள் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி ஏரல் நகரமே முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story