குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை நீட்டிப்பு..!


குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை நீட்டிப்பு..!
x
தினத்தந்தி 5 July 2023 4:04 AM GMT (Updated: 5 July 2023 6:10 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி,

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் தாமதமாக ஜூன் இறுதியில் தொடங்கியது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மதியத்திற்கு மேல் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்காக காத்திருந்தனர். காலை சுமார் 7 மணிக்கு மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மீண்டும் வெள்ளப்பெருக்கு

பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் விழத் தொடங்கியது. புலியருவி உள்பட 4 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தனர். சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. வெயிலே இல்லை. குளிர்ந்த காற்று மிகவும் வேகமாக வீசியது.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக மதியத்திற்கு மேல் அனைத்து அருவிகளிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக போலீசார் வெளியேற்றினர். இதனால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் குளிக்க காத்திருந்தவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து 2வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்தபோது எடுத்த படம்.

இதனிடையே நேற்று மாலையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புலியருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர்.


Next Story