தேன் உற்பத்திக்கு உகந்த மலர்கள் அறிமுகம்


தேன் உற்பத்திக்கு உகந்த மலர்கள் அறிமுகம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தேன் உற்பத்திக்கு உகந்த மலர்களை வேளாண் விஞ்ஞானிகள் அறிமுகம் செய்துள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தேன் உற்பத்திக்கு உகந்த மலர்களை வேளாண் விஞ்ஞானிகள் அறிமுகம் செய்துள்ளனர்.

தேனீ

உலகின் 80 சதவீத உணவுபொருட்கள் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது தேனீ. இந்த தேனீக்கள் மட்டும் மண்ணில் இருந்து மறைந்துவிட்டால் மனிதன் 4 ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு முக்கியமான தேனீக்களை வளர்த்து 80 சதவீத தேனை உற்பத்தி செய்து சீனா உலகின் முதல் இடத்தில் உள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் தேனீ வளர்ப்பில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இயற்கை தேன் உற்பத்தியின் முக்கிய பகுதியாக திகழ்கிறது. கடந்த 2020-21-ஆம் ஆண்டில் ரூ.716.13 கோடி மதிப்பிலான 59 ஆயிரத்து 999 மெட்ரிக் டன் இயற்கை தேனை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. தேனின் முக்கியத்துவம் கருதி அதன் லாபம் அன்னியசெலாவணியை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் தேனீ வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன.

கோடை காலம்

இதற்காக விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேனீ வளர்ப்பில் மிக முக்கிய தடையே கோடைகாலமான வருடத்தில் 4 மாதங்கள் பூக்களின்றி தேன் உற்பத்தி செய்ய முடியாமல் தேனீக்கள் பறந்து செல்வதுதான். இந்த குறையை போக்க வேளாண் ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு முழுவதும் தடையின்றி தினமும் பூக்கும் மலர்களை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் தற்போது வெள்ளை சாக் ரோஜா எனப்படும் வெள்ளை பூக்கள், மஞ்சள் சாக் ரோஜாக்கள் எனப்படும் மஞ்சள் பூக்கள் ஆகியவற்றை கண்டறிந்து அதனை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

பரிந்துரை

இந்த பூக்கள் அனைத்து மண் வளத்திலும் தலா 2 அடி நீள, அகலத்தில் வளரும் தன்மை கொண்டது. ஆண்டுமுழுவதும் தினமும் பூக்கள் பூத்து தேனீக்களுக்கு உகந்ததாக அமையும். இந்த பூக்களை ஊன்றி வைத்தாலே அதிக தண்ணீர் தேவையின்றி தானாக வளரும் தன்மை கொண்டது. இந்த 2 வகையான பூக்களை விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி இணை பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:- தேனீ வளர்ப்பு மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு பல லட்சம் வருமானம் கிடைப்பதால் நல்ல லாபகரமான தொழிலாக மாறி உள்ளது. ஒரு பெட்டிக்கு 40 கிலோ மகசூல் பெறலாம் என்பதால் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றாலும் ரூ.4 ஆயிரம் கிடைக்கும். இவ்வாறு 40 பெட்டிகள் வளர்த்தால் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கிடைக்கும்.

லாபம்

விவசாயிகள் தவிர சுயதொழில் புரிய விரும்பும் பெண்கள், இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் மேற்கண்ட வெள்ளை, மஞ்சள் பூக்களை வளர்த்து அதன் இடையில் தேனீ வளர்ப்பு பெட்டிகளை வைத்து ஆண்டு முழுவதும் தேன் எடுத்து லாபம் சம்பாதிக்கலாம். இதற்காக வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பூ நாற்றுகள் வழங்குகிறோம். இதில் ஆர்வம் உள்ளவர்கள் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story