திருவாரூரில் பூக்கள் விலை உயர்வு
திருவாரூரில் பூக்கள் விலை உயர்வு
சுப முகூர்த்த தினத்தையொட்டி திருவாரூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ முல்லை பூ ரூ.400-க்கு விற்பனையானது.
முகூர்த்த நாட்கள்
திருவாரூரில் உள்ள கடைவீதியில் ஏராளமான பூ கடைகள் உள்ளன. இந்த பூ மார்க்கெட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். அப்போது அதற்கேற்றார்போல் பூக்களின் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும்.
இதேபோல மழை காலத்திலும், பனிக்காலத்திலும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் வரத்து குறைவாக இருக்கும். இதனால் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும்.
முல்லை பூ ரூ.400-க்கு விற்பனை
அதன்படி திருவாரூர் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று திருவாரூரில் பூக்கள் சற்று விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் 1 கிலோ ரூ.270-க்கு விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ரூ.400-க்கு விற்பனையானது. மேலும் ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ முல்லை பூ ரூ.400-க்கு விற்கப்பட்டது. சம்பங்கி ரூ.100-க்கும், ரோஸ் ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், அரளி ரூ.120-க்கும் விற்பனையானது.
பூக்களின் விலை அதிகரிப்பு
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,
கடந்த சில நாட்களாக எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்து காணப்பட்டது. இதனால் பூக்களின் விலையும் குறைந்திருந்தது. இன்று (நேற்று) முதல் தொடர்ந்து 2 நாட்கள் சுப முகூர்த்த தினம் உள்ளதால் பூக்களின் தேவை அதிகரிக்கும். மேலும் அனைத்து பகுதிக்கும் பூக்கள் அனுப்பப்படுவதால் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது என்றனர்.