சென்னையில் 20 கி.மீ மேலேயே பறக்கலாம்! வரப்போகும் பிரமாண்ட 2 அடுக்கு சாலை


சென்னையில் 20 கி.மீ மேலேயே பறக்கலாம்! வரப்போகும் பிரமாண்ட 2 அடுக்கு சாலை
x

சென்னை மதுரவாயால் துறைமுகம் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தின் கட்டுமான பணி அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.

சென்னை,

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மற்றும் துறைமுகங்களில் இருந்து கண்டெய்னர்களை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக கொண்டு செல்லவும் 2009 -ல் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தடைபட்டது.

தற்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இந்த திட்டத்தை கையில் எடுத்தார். இதனை இரண்டு அடுக்கு பறக்கும் சாலை திட்டமாகவும் மாற்றினார். இதற்காக 2022 - ம் ஆண்டு மே 16 -ம் தேதி தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்படி மொத்தம் 20.56 கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் 5855 கோடி ரூபாயில் இரண்டு அடுக்கு பறக்கும் சாலை திட்டத்திற்கு கடந்த ஆண்டு மே 26 -ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் இதற்கான கட்டுமானம் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை மும்பையை சேர்ந்த ஜே.குமார் இன்பிரா கட்டுமான நிறுவனம் எடுத்துள்ளது.

மொத்தம் உள்ள 20.56 கிலோமீட்டர் தூரத்தில் 12.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரை கூவம் நதி மேலே இரண்டு அடுக்கு பாலமாக கட்டப்பட உள்ளது. இதில் மொத்தம் 7 நுழைவு வாயில்களும் மற்றும் 6 வெளியேறும் வழிகளும் அமைக்கப்படவுள்ளது. இதனை இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதன் கட்டுமான பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்படும்.


Next Story