சத்துணவு ஊழியர்கள் மறியல்


சத்துணவு ஊழியர்கள் மறியல்
x
தினத்தந்தி 26 Oct 2023 10:45 PM GMT (Updated: 26 Oct 2023 10:46 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ், மாநில செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்துவதை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

அதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகே ஏ.எம்.சி. சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த 95 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து அவர்கள் அனைவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story