சப்-ஜூனியர் கால்பந்து போட்டியில் அமராவதி சைனிக் பள்ளி அணி கோப்பையை கைப்பற்றியது


சப்-ஜூனியர் கால்பந்து போட்டியில் அமராவதி சைனிக் பள்ளி அணி கோப்பையை கைப்பற்றியது
x
தினத்தந்தி 29 Jun 2023 1:00 PM GMT (Updated: 30 Jun 2023 10:15 AM GMT)

உடுமலையை அடுத்த அமராவதி சைனிக்பள்ளியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் சைனிக் பள்ளி அணி சப்-ஜூனியர் பிரிவில் கோப்பையை கைப்பற்றியது.

திருப்பூர்

தென்மண்டல கால்பந்து போட்டி

உடுமலையை அடுத்த அமராவதியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகின்ற சைனிக் பள்ளி உள்ளது. இங்கு 2023-24 ம் ஆண்டுக்கான தென்மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. போட்டியை அமராவதி சைனிக் பள்ளி நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் தீபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடக்கிவைத்தார்.

போட்டியில் சைனிக்பள்ளி அமராவதிநகர் (தமிழ்நாடு), சைனிக் பள்ளி கலிகிரி (தெலுங்கானா), சைனிக் பள்ளி குடகு (கர்நாடகா), சைனிக் பள்ளி பீஜப்பூர் (கர்நாடகா), சைனிக் பள்ளி கழக்கூட்டம் (கேரளா), சைனிக் பள்ளி கொருகொண்டா (ஆந்திரபிரதேசம்) உள்ளிட்ட ஆறு சைனிக் பள்ளிகள் பங்கேற்றன. போட்டிகள் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் என இரண்டு பிரிவுகளில் லீக் முறையில் நடைபெற்றது.

உடுமலை அணி சாம்பியன்

எ மற்றும் பி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு அணிகளுக்கு இடையே 3 நாட்கள் பரபரப்பாக போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகள் நேற்று இறுதிப்போட்டியில் மோதின. ஜூனியர் பிரிவில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சைனிக் பள்ளி கொருகொண்டாவை வீழ்த்தி சைனிக் பள்ளி கழக்கூட்டம் முதலிடம் பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. சப்-ஜூனியர் பிரிவில் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சைனிக் பள்ளி ்கொருகொண்டாவை வீழ்த்தி அமராவதி நகர்சைனிக்பள்ளி அணி முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது.

அதைத்தொடர்ந்து போட்டியின் நிறைவு விழா அமராவதி சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் கே.மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. அதை பள்ளி முதல்வர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பள்ளி முதல்வர் கேப்டன் கே.மணிகண்டன் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து பதக்கம் அணிவித்து கோப்பையை வழங்கினார். இதில் சைனிக் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story