கால்பந்து வீராங்கனை மரணம் - மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை...!


கால்பந்து வீராங்கனை மரணம் - மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை...!
x
தினத்தந்தி 16 Nov 2022 11:37 AM GMT (Updated: 16 Nov 2022 11:37 AM GMT)

சென்னை கால்பந்து வீராங்கனை மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

சென்னை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் - உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது 17). பள்ளியில் படிக்கும்போதே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். மாவட்ட அளவில் ஜொலித்த பிரியாவுக்கு தேசிய அளவில் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக மின்ன வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது.

பள்ளிப்படிப்பு முடித்து ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்தார். தினமும் கால்பந்து விளையாட்டிலும் அவர் ஈடுபட்டு வந்தார். மூட்டுவலியால் அவதி இந்நிலையில் சமீபத்தில் பிரியா மூட்டு வலியால் அவதிப்பட்டார். பல சிகிச்சைகளை மேற்கொண்டபோதும், அவருக்கு கால் வலி சரியாகவில்லை.

இதையடுத்து பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரது காலை பரிசோதித்த டாக்டர்கள் லேசாக ஜவ்வு கிழிந்திருக்கிறது என்றும், இதற்காக சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை

இதனையடுத்து அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னர் தனது கால்வலி குணமாகும். மீண்டும் கால்பந்து போட்டியில் சாதிக்கலாம் என பிரியா நினைத்தார். ஆனால் கால் தொடர்ந்து வீங்கி வலியும் அதிகரித்தது. வலியால் பிரியா மிகவும் அவதிப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கால் அகற்றப்பட்டது அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதும், அதனால்தான் அறுவை சிகிச்சைக்கு பிறகு கால் வீங்கியதும் தெரியவந்தது. மேலும் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் அவரது காலை அகற்ற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வேறு வழியின்றி காலை அகற்ற கண்ணீருடன் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டது. கண்முன்னே துள்ளிக்குதித்து கால்பந்து விளையாடிய தங்களது ஆசை மகள் இந்த நிலைக்கு வந்ததை கண்டு பெற்றோர், உறவினர் சொல்ல முடியாத துயரம் கொண்டனர்.

பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம் என்றும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையே ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரியாவுக்கு ரத்தநாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், மயக்கவியல் துறை நிபுணர், பொதுமருத்துவ சிகிச்சை நிபுணர் அடங்கிய குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அவரது உடல்நிலை நேற்று காலை மோசம் அடைந்தது. சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் குழு கடுமையாக போராடியபோதும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.15 மணியளவில் பிரியா பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் கால்பந்து வீராங்கனை மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இவர், பிரியா மரணம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தர மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story