நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கடலூர்

உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதீய ஜனதா அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா வரவேற்றார்.

ஏழைகளுக்கு எட்டாக்கனி

போராட்டத்தை கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசியதாவது:-

மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், 5 ஆண்டுகளில் ரூ.1¼ கோடி செலவாகிறது. இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக இருக்கிறது. ஆகவே தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்கள் மீது அக்கறை

அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த தீர்மானத்தை பற்றி கவலைப்படாமல், நீண்ட நாட்களுக்கு பிறகு அதை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார். மாணவர்கள் மீது அக்கறை கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினார்.

ஆனால் கவர்னர் அதில் கையெழுத்து போடாமல் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்றும் கவர்னர் பேசி இருக்கிறார். மாணவர்கள் உயிர் பலி ஆகக்கூடாது என்று தான் இந்த உண்ணாவிரத போராட்டம் மாநிலம் முழுவதும் நடக்கிறது. ஆகவே நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.

மாலையில் முடிந்தது

இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல தலைவர்கள் சங்கீதா, பிரசன்னா, சங்கீதா செந்தில்முருகன், பகுதி செயலாளர்கள் நடராஜன், வெங்கடேஷ், சலீம், இளையராஜா, மாநகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், விஜயசுந்தரம், டாக்டர் மனோகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்திக், கடலூர் இளைஞரணி துணை அமைப்பாளர் சரத் தினகரன், பகுதி துணை செயலாளர்கள் லெனின், ஜெயசீலன், வக்கீல் பாபு, ஆதி.பெருமாள், ரவிச்சந்திரன், சன்பிரைட் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி பாத்திரக்கடை மாரியப்பன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி நிர்வாகிகள், கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலையில் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வெ.கணேசன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றி கூறினார்.


Next Story