குலுக்கலில் கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.3.90 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
குலுக்கலில் கார் பரிசாக விழுந்ததாக கூறி, ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார் பரிசு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி பாரதி. இவர் குறிப்பிட்ட ஒரு செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் அடிக்கடி துணி வாங்கி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு எங்களது செயலியை பயன்படுத்தி அதிக துணிகள் வாங்கியதால், குலுக்கல் முறையில் ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கார் பரிசாக விழுந்து இருப்பதாக தகவல் வந்தது. அதற்கு முன்பணமாக ரூ.3 லட்சத்து 89 ஆயிரத்து 800 கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதை உண்மை என நம்பி அவர்கள் கேட்ட முன்பணத்தை பல்வேறு தவணையாக பாரதி ஆன்லைனில் அனுப்பி உள்ளார். இருப்பினும் கார் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாரதி இதுகுறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.