துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்ததை கண்டித்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
6 ஏக்கர் நிலம் அடமானம்
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி மகன் ஜெகநாதன் (வயது50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ.28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடன் கெடு காலம் முடிந்ததால், பெருமாநல்லூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.40 லட்சத்திற்கு விவசாய நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். அதன் மூலம் ஏற்கனவே பணம் வாங்கிய திருப்பூரை சேர்ந்தவரின் கடனை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
போலி பத்திரம்
இதற்கிைடயில் கடன் தொகைக்காக பெருமாநல்லூர் நிதி நிறுவனத்திற்கு கிரைய உடன்படிக்கை எழுதிக்கொடுத்துள்ளார். கடன் தொகை செலுத்தாவிட்டால் நிலம் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாகி விடும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது.
வங்கியில் கடன் பெறுவதற்காக, கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்து கொடுக்குமாறு நிதி நிறுவனத்தில் ஜெகநாதன் கேட்டுள்ளார். ஆனால் காலம் தாழ்த்திய அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெகநாதன் வில்லங்க சான்றிதழ் எடுத்துப் பார்த்தபோது அதில் அவரது நிலத்தை, போலியான பத்திரங்கள் தயாரித்து கடந்த 2020-ம் ஆண்டு வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
தீக்குளிக்க முயற்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வேதனை அடைந்த ஜெகநாதன் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். மனவேதனையில் இருந்த அவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
உடனடியாக அருகே இருந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். இதையடுத்து ஜெகநாதனின் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற காரியங்களில் இனி ஈடுபடக்கூடாது என பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா விவசாயி ஜெகநாதனுக்கு அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் பல்லடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.