ரூ.6 லட்சம் மோசடி; நிதிநிறுவன அதிபர் மீது வழக்கு
ரூ.6 லட்சம் மோசடிசெய்த நிதிநிறுவன அதிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காரைக்குடி,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). இவர் அப்பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். தனது பள்ளிக்கூடத்தை விரிவுபடுத்த காரைக்குடி முத்துரணியை சேர்ந்த பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் அன்பழகனை சந்தித்தார். அவரிடம் ரூ.2 கோடி கடனாக கேட்டாராம். அதற்கு அன்பழகன் ரூ.6 லட்சத்து 2 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என கூறினாராம். இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன் கூறிய வங்கி கணக்கிலும், நேரடியாகவும் என ரூ.6 லட்சத்து 2 ஆயிரத்து 500 செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதன்பின் கடன்தொகையை கொடுக்காமல் அவர் நாட்களை கடத்தியும், பணத்தை திரும்ப கொடுக்கவும் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் அன்பழகன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்பழகன் இதேபோல் தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒருவரை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.