வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த நெல்லை வாலிபர் மீது தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை வாலிபர்
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் தர்மபுரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு, நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த டேனியல் செல்வராஜ் (25) என்ற வாலிபர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமானார். அப்போது டேனியல் செல்வராஜ் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், தற்போது மாலத்தீவில் 100 பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு ஒருவருக்கு முன் பணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மணிகண்டன் பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கி டேனியல் செல்வராஜ்க்கு வங்கி கணக்கு மூலம் ரூ.23 லட்சம் வரை வழங்கியுள்ளார்.
போலி ஆணை
இதையடுத்து பணிக்கான ஆணையை டேனியல் செல்வராஜ் அனுப்பினார். ஆனால் அதை ஆராய்ந்தபோது, அவை போலியானது என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது டேனியல் செல்வராஜ், மணிகண்டனை மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து மணிகண்டன் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் டேனியல் செல்வராஜ் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.