விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக-ரூ.11 ¾ லட்சம் மோசடி; ஜெராக்ஸ் கடைக்காரர் கைது
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 ¾ லட்சம் மோசடி செய்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி
காரைக்குடி சத்தியமூர்த்தி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது 55). இவர் காரைக்குடி பெருமாள் கோவில் அருகே ஜெராக்ஸ் கடை வைத்துள்ள செஞ்சையை சேர்ந்த ஜெயமுருகன் (44) என்பவரிடம் தனது மூத்த மகன் ரமேசுக்கு வேலை வாங்குவது குறித்து பேசியுள்ளார். அப்போது ஜெயமுருகன், ரமேசுக்கு டெல்லி ஏர்போர்ட்டில் வேலை வாங்கித்தர முடியும். ஆனால் அதற்கு பணம் செலவாகும் என்று கூறினாராம். இதை நம்பிய மங்கையர்க்கரசி ரூ.11 லட்சத்து 70 ஆயிரத்தை ஜெயமுருகனிடம் கொடுத்தாராம். ஆனால் ஜெயமுருகன் கூறியபடி வேலை வாங்கித் தராமல் 2 வருடங்களாக நாட்களை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மங்கையற்கரசி பணத்தை திருப்பி கேட்ட போதும் அவர் கொடுக்க மறுத்தாராம். இதுகுறித்து மங்கையர்க்கரசி காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சத்து 70 ஆயிரத்தை மோசடி செய்ததாக ஜெய முருகனை கைது செய்தனர்.