தர்மபுரியில்நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேலும் 20 பேர் புகார்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
தர்மபுரியில் நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேலும் 20 பேர் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.88 கோடி மோசடி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியை சேர்ந்த சகோதரர்களான அருண்ராஜா (வயது 37), ஜெகன் (39) ஆகியோர் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் 2,500 பேர் முதலீடு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு விதிமுறைகளின்படி முதலீட்டு தொகையை வழங்கவில்லை என்றும், ரூ.88 கோடி மோசடி நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மோசடி, தமிழ்நாடு சிறப்பு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருண்ராஜா, ஜெகன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் 20 பேர் புகார்
தர்மபுரியில் உள்ள அருண்ராஜாவுக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடு, ரூ.25 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே 68 பேர் புகார் அளித்த நிலையில் கடந்த 2 நாட்களில் மேலும் மேலும் 20 பேர் மோசடி புகார் அளித்தனர். ரூ.3 கோடியே 17 லட்சம் அளவில் மோசடி நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அருண்ராஜாவின் குடும்பத்தினரின் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்து தகவல் அறிய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். இதேபோல் இந்த குடும்பத்தினர் பெயரில் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விவரங்கள் அறிய போக்குவரத்து துறை ஆணையருக்கும், பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் தொடர்பாக தகவல் அறிய வருமான வரித்துறையினருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடிதங்கள் அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.